×

வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில் தென்னையில் வேர் ஊட்ட முறை செயல்விளக்கம்

 

நாகர்கோவில், மே 6: தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனார் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் படிக்கும் இளங்கலை இறுதி ஆண்டு மாணவர்களான அபிமன்யூ, சந்துரு, ஹரிஹரன், மாரீஸ்வரன், சிவக்குமார், வேலுசங்கர், வெங்கடேஷ் பத்மநாபன், ஜெயேந்திரா ஆகியோர் தக்கலை சுற்றுவட்டார பகுதியில் கிராமப்புற வேளாண் களப்பயிற்சி அனுபவம் பெற்று வருகின்றனர்.

தக்கலை பிரம்மபுரத்தை சேர்ந்த விவசாயி பிரசாத்தின் தென்னந் தோப்பில் தென்னை வேர் ஊட்டம் குறித்து கல்லூரி முதல்வர் தேரடிமணி தலைமையில் கல்லூரி பேராசிரியர்கள் காளிராஜன், பரமசிவம், கவிதா புஷ்பம் ஆகியோர் மேற்பார்வையில் மாணவர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட தென்னை மரத்திலிருந்து 3 அடி தொலைவில் குழி தோண்டி புதியதாக வளர்ந்த இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிற வேரைத் தேர்ந்தெடுத்து, அதன் நுனியில் சரிவாக வெட்டி தென்னை டானிக் 10 மில்லியை, 40 மில்லி தண்ணீரில் கலந்து பாலித்தீன் பையில் முழுமையாக மூழ்கும்படிச் செய்து நூலால் கட்ட வேண்டும். 24 மணி நேரம் கடந்து உறிஞ்சுதல் இருக்கிறதா என சோதனை செய்ய வேண்டும். இதன் மூலம் தாவர வளர்ச்சி, உறிஞ்சுதல் நோய் எதிர்ப்பு, ஒட்டு மொத்த உற்பத்தி திறனை அதிகரிப்பதுடன் தேங்காய் கருப்பு தலை கம்பிளி பூச்சியை கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டது.

The post வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில் தென்னையில் வேர் ஊட்ட முறை செயல்விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Agriculture College ,Nagercoil ,Abhimanyu ,Chanduru ,Hariharan ,Mariswaran ,Sivakumar ,Velusankar ,Venkatesh Padmanaban ,Jayendra ,V.U.Chitambaranar Agricultural College and Research Institute ,Killikulam ,Tuticorin ,Thakala ,
× RELATED பொன்னமராவதி அருகே செம்பூதியில் கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்